299. என் அம்முவும் குட்டி ராட்சசியும்
ரொம்ப நாளா எழுதணமுன்னு நெனச்சு, இப்பத் தான் எழுத முடிஞ்சது. ஏதோ, சின்னச் சின்ன விஷயங்களையும் பதிந்து வைக்க வேண்டும் என்று தோன்றியதன் விளைவே, சற்றே நீண்ட இப்பதிவு !
மூத்தவள் அம்மு (அதாங்க, என்னோட உரல் balaji_ammu.blogspot.com-ல இருக்கற பேரு) ரொம்ப சாத்வீகம், இயற்கையாகவே சாது (நம்ம வளர்ப்பு அப்படின்னு சொல்ல வரலீங்க!), சொன்னதைப் புரிந்து செயல்படுபவள் (உங்களை மாதிரி இல்லன்னு நீங்க சொல்ல வருவதும் புரியாமல் இல்லை:)) பிடிவாதம் என்பது மருந்துக்குக் கூட கிடையாது. பொறுமைசாலி. மென்மையான குணம். (மரபணு அறிவியலுக்கு அப்பாற்பட்டு சமயத்துலே இப்படி நடக்கறது உண்டுங்க!) இரண்டு வயதிலேயே ஸ்பஷ்டமான பேச்சு, மூன்றரை வயதில் அமலானாதி பிரான் (பிரபந்தம்) பாசுரங்களை மனப்பாடமாகச் சொல்வாள் ! அவளது நாலு வயதிலிருந்து, பள்ளியில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியுள்ளாள்.
இருவருமே (நான், மனைவி) வேலைக்குச் சென்றதால், பத்து மாதத்திலிருந்து, 6 வயது வரை, எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய பெண்மணி வீட்டில் விட வேண்டிய சூழல் ! முதலில் கொஞ்சம் கில்டியாகத் தான் இருந்தது. இது வேலைக்குப் போகும் எல்லா பெற்றோர்களுக்கும் பொருந்தும் தானே ! அம்முவோ, அந்த வீட்டிலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு, அவர்களின் அன்புக்கு பாத்திரமாகி விட்டாள். சின்னவளுக்கு அதிர்ஷ்டம் ஜாஸ்தி. வீட்டிலேயே ஒரு ஆளை வைத்து, அவளை பார்த்துக் கொள்ள முடிகிறது.
முதல் வகுப்பு படிக்கும்போது, ஒரு முறை, அம்மு சரோஜினி நாயுடுவாக வேடமிட்டு, நான் எழுதிக் கொடுத்ததை அருமையாகப் பேசி பரிசு வாங்கினாள். அவள் பேசியதை கணினியில் சேமித்து வைத்திருந்தேன். போறாத வேளை, அந்த ஹார்ட் டிஸ்க் மண்டையைப் போட்டு விட்டது :( படிப்பிலும் சுட்டி, அதனால் ஆசிரியைகளுக்கு பிடித்த மாணவியாக இன்று வரை (இப்போது வயது 10) திகழ்கிறாள். அதிர்ந்து பேசி அறியாதபோதும், அவள் தான் கடந்த இரண்டு வருடங்களாக வகுப்புத் தலைவி என்ற செய்தி கேட்டு சற்று ஆச்சரியம் ஏற்பட்டது !
மூத்தவள் பிறந்து, அதற்கடுத்த 5 வருடங்கள் என் வாழ்வின் வசந்தகாலம் என்று கூறுமளவுக்கு ஓர் அருமையான காலகட்டம் ! அப்போது வருடத்திற்கு மூன்று தடவை, ஏதாவது ஊருக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. மைசூர், பெங்களூர், மதுரை, கோவை, தஞ்சாவூர், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், முன்னார், கோடை என்று பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறோம். மிகவும் சந்தோஷமான நாட்கள் ! அதன் பின் ஐந்தாறு ஆண்டுகளே ஆகியிருப்பினும், என்னவோ ரொம்ப நாள் ஆன மாதிரி ஓர் உணர்வு !
சின்னவளை (மானு) அதே பள்ளியில் சேர்க்கச் சென்றபோது, மூத்தவளுக்கு LKG எடுத்த ஆசிரியை தன் வகுப்பிலேயே சின்னவளை சேர்த்துக் கொள்ள விரும்பி, அவ்வாறே நடந்தது. ஒரு இரண்டு மாதங்கள் கழித்து அவரைச் சந்தித்தேன். அவர், "மூத்தவள் போல இவளும் இருப்பாள் என்று நம்பி, இவளை என் வகுப்பில் சேர்த்துக் கொண்டதற்கு என்னை படாத பாடு படுத்துகிறாள்" என்றி சிரித்துக் கொண்டே கூறினார். அன்று ஆரம்பித்த புகார் இன்றும் தொடர்கிறது :)
ஒரு சமயம் காணாமல் போயிருக்க வேண்டியவள், இப்போது நினைத்தாலும் பகீர் என்கிறது ! வீட்டுக்கு அருகிலேயே உள்ள ஒரு சிறு பள்ளியில் மானுவை Pre-KGயில் சேர்த்திருந்தோம். மதியம், ஓர் ஆயா கூட்டி வருவதாக ஏற்பாடு. ஆயா வராவிட்டால், எனக்கோஎன் மனைவிக்கோ உடனே ·போன் செய்யுமாறும், யாரையாவது அனுப்பி குழந்தையை கூட்டிக் கொள்கிறோம் என்றும் தெளிவாக ஆசிரியையிடம் கூறியிருந்தேன். எப்போதும் எங்களிடம் முன்கூட்டியே தன் லீவு பற்றி செய்தி தரும் ஆயா, சொல்லாமல் கொள்ளாமல், ஒரு நாள் மானுவைக் கூட்டி வர பள்ளிக்குச் செல்லாதது, எங்கள் கெட்ட நேரம் தான் !
அந்த ஆசிரியை எங்களுக்கு ·போன் செய்யாமல், சிறிது நேரம் பார்த்து விட்டு, மானுவை விட 2 வருடங்கள் வயதில் பெரிய ஒரு சிறுவனிடம், சரியான வீட்டு முகவரியையும் தராமல், "மெயின் ரோட்டை க்ராஸ் பண்ணி, அப்படியே கொஞ்ச தூரம் போனால், ஒரு புது அடுக்கு மாடி குடியிருப்பு இருக்கும். அங்கே, விசாரிச்சு விட்டுடு" என்று கொஞ்சம் கூட பயமோ, பொறுப்போ இல்லாமல் அச்சிறுவனுடன் மானுவை அனுப்பி விட்டார். அவர் குறிப்பிட்ட திசையில் எங்கள் வீடு இல்லை என்பது தான் பிரச்சினையே !
இன்னும் குழந்தையைக் காணவில்லையே என்று என் தாயார் (அவருக்கு நடப்பதில் பிரச்சினை என்பதால் தான் ஆயா ஏற்பாடு) கவலையுடன், ஓட்டமும் நடையுமாக பள்ளிக்கு அருகே சென்றபோது, சற்று தொலைவில் மெயின் ரோடு நோக்கி சென்று கொண்டிருந்த குழந்தை மானு தான் என்று சீருடையை வைத்து அடையாளம் கண்டு கொண்டார். பதைபதைத்துப் போய், அவ்வழி சென்று கொண்டிருந்த ஒரு சைக்கிள்காரரின் உதவியுடன், மானுவை பிடித்து விட்டார். இருந்த படபடப்பில், பள்ளிக்குச் சென்று, ஆசிரியையை லெ·ப்ட் ரைட் வாங்கி விட்டார் ! ஆசிரியையும் தன் தவறை உணர்ந்து விட்டதால், அத்தோடு பிரச்சினை முடிந்தது.
கடவுள் அருளால் மானு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தாள். வாழ்க்கையில் இதுவும் ஒரு பாடம் ! அன்றிலிருந்து குழந்தைகள் விஷயத்தில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். என்னால் முடிந்தது, ஆயாவுக்கு ஒரு backup ஆளை ஏற்பாடு செய்து விட்டேன் :)
அம்முவும் சரி மானுவும் சரி, Pre-KG சென்ற முதல் நாட்களிலோ, LKG-க்காக பெரிய பள்ளி சென்ற முதல் நாட்களிலோ, துளியும் அழாமல் உற்சாகமாகச் சென்றதால், எங்களுக்கு எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் போனது ! என் இரண்டாவது மகளின் மழலை வாய்த் துடுக்கை சொல்லி மாளாது :)
1. ஒரு சமயம், என் மனைவியின் நகம் பட்டு என் கண்ணில் அடிபட்டபோது (அது குறித்து நான் எழுதிய பதிவு இங்கே!) அதற்கடுத்து ஒரு மூன்று மாதங்கள், வீட்டிலுள்ள அனைவரின் நகங்களையும் மானு அடிக்கடி பார்வையிட்டு, அவற்றை வெட்டி விடுமாறு அறிவுரை தந்த வண்ணம் இருந்தது நல்ல காமெடி :) வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் விட்டு வைக்கவில்லை என்பது விசேஷம் !
2. இன்னொரு அறிவுரை, நான் பைக்கில் ஏறிச் செல்லும்போதெல்லாம், என் அம்மா சொல்கிறார்களோ, இல்லையோ, மானு மறக்காமல், 'பத்திரமாக போய்ட்டு வாங்க, ஓவர்டேக் எல்லாம் பண்ணாதீங்க' என்று கூறுவது தான் !
3. இவளுடன் படிக்கும் ஒரு சிறுவன் ஒரு முறை இவளை அடித்து விட்டான். இவள் ஏதாவது அவனைச் சீண்டியிருப்பாள், அதைக் கூறவே மாட்டாள். தான் அடிபட்ட விஷயத்தை மட்டும் கூறி, பெரிய மனுஷி தோரணையில், "இத டீச்சர் கிட்ட வந்து, கம்ப்ளெயிண்ட் பண்ணாதீங்க, போனப் போறது' என்று டிராமா போடுவதில் வல்லவள் :)
4. பள்ளியில் தின்பதற்கு, நாங்கள் எவ்வளவு snacks கொடுத்து அனுப்பினாலும், மற்ற குழந்தைகள் எடுத்து வருவதை கேட்டுத் (பெரும்பாலும் பிடுங்கி) தின்பது தான் மானுவுக்கு மிகவும் பிடிக்கும் ! அதனால், அவள் பள்ளிக்குச் செல்வதற்கு முன், 'யாரோட snacks-ஐயும் எடுக்க மாட்டேன்' என்று சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டு தான் அவளை அனுப்புவது வழக்கம். இப்போது பரவாயில்லை !
5. என் மனைவி பணிக்குச் செல்லும்போது ஒரு தடவை லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு கிளம்பவே, அதைப் பார்த்த மானு, 'ஆபிஸ¤க்குத் தானே போறீங்க ? கல்லாணத்துக்கா போறீங்க ?' என்று ஓட்டவே, என் மனைவி, ஏதாவது விழாவுக்குப் போகும்போது லிப்ஸ்டிக் போடுவதைக் கூட விட்டு விட்டார் !
6. மானுவை யாராவது கண்டித்தால் அல்லது மிரட்டினால், வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன் என்று பாவ்லா காட்டுவாள் ! 'ஓடிப் போகக் கூட ஒனக்கு சரியா வழி தெரியாதே' என்றால், 'கார்ல ஏறி ரொம்ப தூரம் ஓடிப் போயிடுவேன்' என்று அவள் சீரியஸாக பதில் கூறுவதை ரசித்திருக்கிறோம் !
7. தொடர்ச்சியாக சில நாட்கள், நான் அலுவலகத்திலிருந்து சரியாக ஒன்பதரை மணிக்கு வீடு சேர்வதை கவனித்த மானு, "எப்டிப்பா, செல்வி (தொலைக்காட்சித் தொடர்) வரும்போது கரெக்டா வந்துடறீங்க? ஒங்களுக்கு ராதிகான்னா ரொம்ப இஷ்டமா?" என்று ஏடாகூடமாக எதோ கேட்க, என் மனைவி கொஞ்சம் கடுப்பானது என்னவோ உண்மை தான் ;-) அஸின், நமீதா என்று கூறாமல், 'சித்தி' ராதிகாவின் ரசிகனாக என்னை என் மகள் அடையாளப்படுத்தியதில் எனக்குக் கூட வருத்தம் தான் ;-) ஆனால், என் மனவருத்தத்தை என் மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலைமை ;-)
8. மூத்தவளை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து, மானு அவளை அடிப்பது சகஜமாக நடக்கும். மூத்தவள் திருப்பி அடிக்கவே மாட்டாள். ஒரு முறை ஸ்கேலால் சற்று ஓங்கி அடித்ததை நான் பார்த்து விட்டு முறைக்கவே, மானு அம்முவை நோக்கி, "நான் தான் ஏதோ கோவத்துலே அடிக்க வரேனே, கொஞ்சம் தள்ளிக்கோயேன், அடி படாதுல்ல!" என்று சமாளித்ததைக் கேட்டவுடன், என் கோபம் போய் விட்டது.
9. எல்லாத்தையும் விட சூப்பர் மேட்டர், "டாய்லெட்டுல எனக்கு வேத்துக் கொட்டுது, அங்க ஒரு ·பேன் வேணும்பா" என்று ஒரு முறை என்னிடம் வேண்டுகோள் வைத்தாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்:)
10. வார விடுமுறையில், நான் கணினியை ஆன் செய்தவுடன், "ஆரம்பிச்சுட்டீங்களா, ஒங்க பிளாக்கிங்க (blogging) ? இனிமே காதுல ஒண்ணும் விழாது" என்று பாட்டி மாதிரி குதர்க்கம் பேசுவாள் !
11. அம்முவைப் போல், பள்ளியில் நடக்கும் போட்டிகளில் மானு கலந்து கொள்வதில்லை என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பேன். ஒரு வழியாக, ஒரு முறை மாறுவேடப் போட்டி ஒன்றில், MS சுப்புலஷ்மியாக மேடையேறி, 'குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா' வை மழலையாகப் பாடி அசத்தி விட்டாள் ! அதைத் தொடர்ந்து, ஏதோ ஒரு குழு நடனத்திற்காக, மானுவை அவளது ஆசிரியை தேர்வு செய்து, தொடர்ந்து 3 சனிக்கிழமைகள் ரிகர்சலுக்குக் கூட்டி வருமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டார். நான் பள்ளிக்குக் கூட்டிப் போய் காத்திருந்து அழைத்து வர வேண்டியிருந்தது.
மூன்றாவது வாரம், மானுவை பைக்கில் (உடன் என் மனைவியும் வந்தார்) ரிகர்சலுக்குக் கூட்டிச் செல்லும்போது, என் மனைவியிடம், "இதுல எல்லாம் சேர்க்க வேணாம், யார் அலையரது இப்படி ரிகர்சலுக்கு?" என்று ஏதோ கடுப்பில் மெல்லக் கூற, உடனே மானுவிடமிருந்து, "அம்மா, நான் ஸ்கூல்ல நடக்கற competition-ல சேந்தா (சேர்ந்தால்) தான், என்னை எல்லாரும் நல்ல பொண்ணுன்னு கூப்பிடுவா, அப்டின்னு அப்பா தானே அடிக்கடி சொல்லுவாங்க" என்ற பதில் டாண் என்று வெளிப்பட்டவுடன், நான் சற்று ஆடிப் போய் விட்டேன் ! நான் அவ்வாறு அலுத்துக் கொண்டதின் தவறை உணர்ந்து, மானுவை சமாதானப்படுத்தும் விதமாக, "சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன் கண்ணு, இந்த மாதிரி எப்ப ரிகர்சல் வச்சாலும், அப்பாவே உன்னை கொண்டு விட்டு, கூட்டிண்டு வரேன், என்ன?" என்று கூறினேன். குழந்தைகளுக்குத் தான் எத்தனை உன்னிப்பாக கவனிக்கும் திறன் என்றும் எண்ணிக் கொண்டேன்.
எங்கள் வீட்டு சின்ன ராட்சசியைப் பற்றி சற்று நிறையவே சொல்லி உங்களை போரடித்து இருந்தால் மன்னிக்கவும் :) பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 299 ***
28 மறுமொழிகள்:
Test comment !
பாலா: சுவாரசியமாக இருந்தது. :)
இருவரிடமும் நான் 'ஹாய்' சொன்னேன் என்று சொல்லிவிடுங்கள். :)
- மதி
சும்மா ஹாய் சொல்றது சரியில்லல்ல. ஒரு பாட்டோட வந்திட்டேன். :)
http://youtube.com/watch?v=cGRIv3WITVw
-மதி
மதி,
வருகைக்கும், அழகானதொரு பாட்டுக்கும் நன்றி ! ரொம்ப நாளைக்கப்புறம் ஒங்க கமெண்ட், எனது ஒரு பதிவில் :) சாம்பார் வாசனையால் ஈர்க்கப்பட்டு, முன்பொரு முறை என் பழைய பதிவு ஒன்றில் பின்னூட்டமிட்டது ஞாபகத்தில் உள்ளதா ? ;-)
இப்போது தூங்கிக் கொண்டிருக்கும் என் மகள்கள் காலையில் விழித்தெழுந்தவுடன், நீங்கள் 'ஹாய்' சொல்லியதைக் கூறி, பாட்டையும் போட்டுக் காட்டி விடுகிறேன் :)
எ.அ.பாலா
வாசிக்கவே இனிமையாக இருந்தது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
என் கமெண்ட் வந்ததா என்று சந்தேகமாயிருக்கிறது (பிளாக்கர் பிரச்சினை)
படிக்க இத்மாக இருந்தது. என் சார்பில் குழந்தைகளுக்கு ஒரு பாராட்டையும் சொல்லுங்கள்.
பாலாஜி,
நல்லா சுவாரசியமா சொல்லியிருக்கிறாய்
அன்புடன்...ச.சங்கர்
சேதுக்கரசி, பத்மா, சங்கர்,
வரவுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி !
குழந்தைகளுக்கு உங்கள் அன்பைச் சொல்கிறேன்.
Nice post ....
---- shravan
குழந்தைகள் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றனர். நான் உங்கள் வீட்டுக்கு வந்த போதெல்லாம் முக மலர்ச்சியுடன் வரவேற்பார்கள். அதுவும் சின்ன ராட்சசி ரொம்ப க்யூட். பெரியவளது தமிழ் மேலாண்மையோ அபாரம்.
சிறுவயதில் தந்தையன்பிலிருந்து அவரது அகால மரணத்தால் வஞ்சிக்கப்பட்ட நீங்கள் முன்னொரு பதிவில் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருக்கப் போவதாக எழுதியது என் மனதைக் கவர்ந்தது.
அத்துடன் திருவல்லிக்கேணி பற்றிய உங்கள் நினைவுகளுக்கு பின்னூட்டம் இடப்போனபோது அனானி ஆப்ஷன் உங்கள் வலைப்பூவில் இல்லாமல் போனதாலேயே இந்த டோண்டு ராகவன் பிளாக்கர் கணக்கு துவக்கினான் என்பதை பல முறை கூறியதை இன்னொரு முறை கூறுவேன்.
நான் சொன்னதுபோல கண்ணேறு கழிக்கவும். போட்டோக்களை அப்படியே வைத்திருக்க வேண்டுமா என்பதையும் யோசிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் சார்,
வருகைக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி !
சின்னவள் உங்களை டோண்டு என்று ஒருமையில் கூப்பிட்டு, ஒரு முறை திட்டு வாங்கியது நினைவில் உள்ளதா ??? :)
குழந்தைகளிடம் தங்கள் அன்பைச் சொல்கிறேன்.
எ.அ.பாலா
ராகவன் சார்,
உங்களை மானு விளையாட்டாக ஒருமையில் 'டோ ண்டு' என்றழைத்ததை, நீங்கள் அப்போது வெகுவாக ரசித்திருந்தாலும், நான் தான் 'வயதில் மூத்தவரை மரியாதையில்லாமல் கூப்பிடக் கூடாது' என்று அவளைக் கண்டித்தேன்.
தாங்கள் மானுவைக் கண்டித்ததாக (இதற்கு மேல் உள்ள என் பின்னூட்டத்தில் அப்படி ஓர் அர்த்தம் தோன்ற வாய்ப்புள்ளதால்) இப்பதிவை வாசிப்பவர் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த விளக்கப் பின்னூட்டம் !!! நன்றி.
எ.அ.பாலா
//தாங்கள் மானுவைக் கண்டித்ததாக (இதற்கு மேல் உள்ள என் பின்னூட்டத்தில் அப்படி ஓர் அர்த்தம் தோன்ற வாய்ப்புள்ளதால்)//
அப்படியெல்லாம் கூட அர்த்தம் வருமா என்ன? நான் அந்த மாதிரி யோசிக்கவே யில்லை. ஏனெனில், நான் அங்கு அச்சமயம் இருந்ததால் இந்த விஷயத்தில் எனக்கு டவுட்டே எழவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
300 போட்டுட்டுதான் தூங்கப் போறதா உத்தேசமா ? மில்லியைக் கேக்கலை...பதிவைக் கேட்கிறேன் :)
Thanks, Sankara :)
நல்ல பதிவு பாலா. இந்த நினைவுகளைச் சேமித்து வைப்பதும் அழகானது. உங்கள் குட்டி ராட்சசி இங்கே என் தோழியொருவரின் மகளை நினைவூட்டினாள்.
its very interesting and both of your children are very cute.
Do convey my hai to them
fervin moses
நல்ல பதிவுங்க. என் மகனின் லீலைகளையும் இப்படி சேமிச்சு வைக்கணுமுன்னு ஆசையைத் தூண்டி விட்டு விட்டீர்கள். அவங்க பெரியவங்க ஆன உடனே இதை படிக்கக் கிடைத்தால் நன்றாக ரசிப்பார்கள்.
செல்வநாயகி,
தங்கள் முதல் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி :)
Fervin Moses,
Thanks, Boss ! I will convey your 'Hai' to my kids :)
இலவச கொத்தனார்,
வாங்க, நன்றி. நீங்களும் ஒங்க பையனைப் பற்றி எழுதினால் நல்லா இருக்கும், நாங்க ரசிப்போம் இல்ல :) வளர்ந்த பிறகு, குழந்தைகளும் இது போன்ற பதிவுகளை படித்தால் நிச்சயம் ரசிப்பாங்க.
குழந்தைகளின் செயல்கள் எப்பவும் ரசிக்கத் தக்கவைதான்.இன்னும் போகப்போகப் பாருங்கள்,இருக்கிறது கூத்து!
ரெண்டும் பெண்குழந்தைகளா? கொடுத்து வைத்தவர் சார் நீங்கள். அழகழகா டிரெஸ் போட்டு அழகு பார்க்கலாம்.
ஆம்பளைப் பசங்கன்னா நல்லா நாலு போட்டு சாத்தலாமான்னு தோணும்!
kalyanakamala,
வாசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி.
லக்கிலுக்,
//
அழகழகா டிரெஸ் போட்டு அழகு பார்க்கலாம்.
//
நிறைய! போட்டோ க்களும் கூட.
//ஆம்பளைப் பசங்கன்னா நல்லா நாலு போட்டு சாத்தலாமான்னு தோணும்!
//
அது என்னங்க, ஆம்பளைப் பசங்க மேல அத்தனை கடுப்பு :)
எ.அ.பாலா
ur blog was interesting and good :)
கமல்-கிரேஸி-மவுலி கூட்டணி காமெடி படத்தை சரவணபவன் புல் மீல்ஸோடு சாப்பிட்டமாதிரி திருப்தியாக இருந்தது...:)))
எங்கிட்டயும் ஒன்னு இருக்கே ? அது என்ன என்ன செய்யப்போவுதோ ?? ரெண்டு மாசத்திலேயே அம்மாவை அது படுத்துற பாடு !!! சொல்லி மாளாது...
ரவி,
குழந்தையின் 4 வயது வரை அதனுடன் செலவிடும் நேரம் மிக மிக ஆனந்தமானது. பிளாகிங்கை குறைத்துக் கொண்டு குழந்தையுடன் (பெண் தானே?) எவ்வளவு நேரம் செலவழிக்க முடியுமோ அவ்வளவு நேரம் செலவழியுங்கள் என்பது என் அறிவுரை.
ஒரு காலத்தில் பின்னோக்கிப் பார்க்கும்போது அது ஒரு பொற்காலமாகவே தோன்றும். குழந்தையின் இளமைப்பருவத்தில், பெற்றோர் தவற விடக் கூடாத தருணங்கள் பலப் பல உண்டு :)
குழந்தைக்கு என் ஆசிர்வாதங்கள்!
எ.அ.பாலா
Thanks Vadhanaa :)
குழந்தைகளின் உலகம் சுவாரசியம் தான்...அதிலும் அவர்களின் உள்வாங்கும் திறன்...சுவாரசியமாக இருந்தது.
சர்வ ஜாக்கிரதையா இருக்கனும் போல...
ரெம்ப பயமா இருக்கு எனக்கு :P.
***
//ஆம்பளைப் பசங்கன்னா நல்லா நாலு போட்டு சாத்தலாமான்னு தோணும்!//
லக்கிக்கு ஏனிந்த கொலவெறி...ஆனா என்னோட அண்ணனின் மகன் எங்கிட்ட நல்லா சாத்து வாங்குவார் :))ஆனாலும் அவர்மேல எனக்கு லவ்வு அதிகம் தான்
Post a Comment